வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்து வருகை தரும் தலைவர்கள் இந்தியா புத்துயிர் பெற்றுவிட்டது என்று பட்டுக் கம்பளத்தில் நின்று பாராட்டு உரை படித்துவிட்டு போகிறார்கள்.
             கந்து வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒவ்வொரு அரைமணி நேரத்திலும் எங்காவது ஒரு மூலையில் ஒரு விவசாயி  தற்கொலை செய்கிறான். பசியிலும், பட்டினியாலும் இன்றும் இறப்புகள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. பொருட்களின் தரத்தைவிட விலைவாசி பன்மடங்கு உயர்ந்து நிற்கிறது. இன்னும்  மருத்துவமனைகளில் அடிப்படை வசதி கூட இல்லை. கேட்டால் பணம் இல்லயாம்.
              உண்மையான நிலை இப்படி இருக்க, கடல் கடந்து வந்த தலைவர்களும் இங்கே  இருக்கும் உள்நாட்டு தலைவர்களும் இந்தியா முன்னேறிவிட்டது என்கிறார்களே, ஒரு வேலை இந்த தலைவர்களுக்கு ஏதாவது பார்வைக் கோளாறா?  அல்லது வறுமையை மட்டும் பார்க்கும் நமக்கு ஏதாவது மூளைக் கோளாறா?
             1990 கு முன்பு இருந்த இந்தியாவோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியா முன்னேறி இருப்பதாகவே  தோன்றுகிறது. தலைவர்கள்  சொல்வது சரியாக இருக்கக்கூடுமோ என்ற மயக்கமும் ஏற்படுகிறது.
             உலகின் ஒரே வல்லரசாக, அசைக்க முடியாத சக்தியாக அமெரிக்கா எழுந்து நிற்பதற்கு என்ன காரணம்? அந்த  ஆரம்பகால வரலாற்றை தவிர்த்துவிட்டு அதன் அடிப்படை சித்தாந்தத்தை மட்டும் காணும்போது அயல் நாட்டிலிருந்து வருபவராக  இருந்தாலும், உள்நாட்டிலேயே இருப்பவராக இருந்தாலும் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ற தொழில்களைச் செய்ய சகல விதத்திலும் அரசாங்கம் உதவி செய்தது. வெளிநாட்டு மூலதனத்தை வரவேற்கும் அதே நேரத்தில் அந்நியப் பொருட்களின் முதலீட்டை பெருமளவு தவிர்ப்பது . இது தான் அந்த நாட்டின் ஏகபோக வளர்ச்சிக்கு ஆதாரம் என்று  சொல்லலாம். நாட்டினுடைய இயற்கை வளங்களும் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு நாடு செழுமைப்பட்டது.
            ஆனால், நம் நாட்டின் நிலைமையோ தலைகீழானது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது சில அடிப்படை தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். முதலில் மக்களின் கல்வித் தரம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதாவது படித்தவர்கள், பட்டதாரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வித் தரத்தை கணக்கிடக் கூடாது. மாணவர்களின் புதியனவற்றை உருவாக்கும் அறிவுத் திறமையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட வேண்டும். அடுத்ததாக, படித்து முடித்து வெளியேறுகின்ற தலைமுறையினர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பது உத்திரவாதத்துடன் இருக்க வேண்டும்.
             மிக முக்கியமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்த நிலையிலும்  முன்னோக்கிச் செல்வதாக இருக்க வேண்டுமே தவிர ஏற்ற இறக்கத்தோடு இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு இக்கட்டான சூழலில் சர்வதேசச் சமூகம் பொருளாதாரத் தடை விதித்தால் கூட அதை சில வருடங்கள் ஆனாலும் தாக்குப் பிடிக்கும் வலுவோடு நாட்டுப் பொருளாதாரம் இருக்க வேண்டும்.
             பொருளாதார வளர்ச்சிக்காகத் தானே மத்திய அரசு சாகர்மாலா திட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்கிறது என்று கேட்கலாம். கண்டிப்பாக இத்திட்டத்தின் மூலம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது உச்சத்தை தொடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், கடலோரங்களில் குடியிருக்கும் மீனவர்களின் நிலைமை, கடலையே நம்பியிருக்கும் அவர்களின் வாழ்வாதாரமும், தொழிலும் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்று சொல்வதை விட முற்றிலுமாக அழிந்து விடும் என்றே சொல்லலாம். ஒரு இனத்தையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து திட்டங்களை  செயல்படுத்துவது தான் நம் நாட்டின் அரசாங்கம்.
            அரசியல் என்பது சாக்கடை தான் என்றாலும் கூட நாட்டின் நிர்வாகத்தைச் சீரழிக்கும் அளவிற்கு  அதன் வேகம் போக கூடாது. முன் எப்போதும் இல்லாததை விட இப்போது விவசாயத் தொழில் பெரிய பின்னடைவை எதிர் நோக்கி உள்ளது. அசுர வேகத்தில் ஆற்று மணல் படுகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இனி கொள்ளையடிக்க கூட மணல்  இருக்காது.
             சில மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லை, சாலை வசதி இல்லை, இன்னும் சில கிராமங்களில் பள்ளிக்கூடமும் இல்லை. பல அரசு   பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. அரசு பேருந்துகள் ஆஹா.....சொல்லவே வேண்டாம். எதாவது கேள்வி கேட்டல் நிதி இல்லை என்று ஒரே பதில் . சரி ஒதுக்கப்பட்ட நிதி எங்கே  சென்றது?  தான் மட்டும் நல்லாருக்க வேண்டும் என்ற எண்ணமே நிதியை ஊழலாக மாற்றி வைக்கிறது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற உறுதி படைத்த  தலைவர்கள் இருந்திருந்தால் இன்று உலகமே கைகொட்டிச் சிரிக்கும் அலைக்கற்றை ஊழல் நடந்திருக்காது. 2 ஜி அலைக்கற்றைகளை வாங்கிய நிறுவனங்கள் சம்பாதித்த தொகை முழுவதும் நாட்டு நலத்திட்டங்களில் செலவிடப்பட்டிருந்தால் பாதி  இந்தியாவை ஜப்பானாக்கி இருக்கலாம். டாட்டா டெலி  சர்வீஸ் நிறுவனம் 1667 கொடிக்கான உரிமத்தில் வெறும் 25 சதவீதத்தை டோகோமோ நிறுவனத்திற்கு 13000  கோடி ரூபாய்க்கு  விற்பனை செய்துள்ளது. ஒரே வாரத்திலேயே இத்தனை கோடி ரூபாய்களை சம்பாதிக்க முடியும் என்று தனியார் முதலாளிகளுக்கு தெரிந்த விஷயம் அரசுத் தலைவர்களுக்கு  தெரியாது என்றால் அதை நம்புவதற்கு இந்தியர்கள் மடயர்களாகத் தான் இருக்க வேண்டும்.
           இது போன்று எத்தனையோ ஊழல்கள் நம் நாட்டின் வளச்சியை முடக்கி வைத்திருக்கிறது. இந்த ஊழல் முன்னாள் அரசாங்கம் ஏற்பாடு செய்யும் விசாரணைக்  குழுக்கள் எதுவும்  உருப்படியான செயலைச் செய்துவிட  இயலாது. இந்திய மக்களின் சக்தி தான் தவறுகளுக்கு எல்லாம் மூலமாக இருக்கும் ஆதிக்கக் கும்பல்களின் அதிகார வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலும். அப்படி முடிவுக்கு வராத வரையில் இந்தியா வளர்ந்த நாடு அல்ல, வளரும் நாடு அல்ல,  சுரண்டல் அல்லது ஏமாளிகள் நாடு. 
  ******************************ஜெய்ஹிந்த்***********************************
Share:

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages