
காதல் எப்படி தோன்றுகிறது? நம் எதிர்பார்ப்புகள் ஒருவனால் (அ ) ஒருத்தியால் நிறைவேறும் போது தான் காதல் முளைக்கிறது. இதில் கண்டவுடன் காதல் என்பது வேறு பகுதி. பள்ளி பருவத்தில் ஏற்படுவது எல்லாம் இனக்கவர்சியால் ஏற்படுவது மட்டுமே.
எனக்கு தெரிந்த சிறுவன் ஒருவன் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொன்னான். அப்போது அவனுக்கு வயது 16. அப்பெண்ணிற்கும் அதே வயது தான். இருவருமே ஒருவரையொருவர் காதலிப்பதாக சொன்னான். சரி என்று அவன் சொல்வதை எல்லாம் வெறும் கதையாக கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சில ஆண்டுகளில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்தனர். என்னிடம் வந்து புலம்பினான். வழக்கம் போல் அறிவுரை கூறினேன். ஆனால் அவனது வயதோ என் வார்த்தைகளை ஏற்க மறுத்துவிட்டது. ஓரிரு மாதங்களில் கல்லூரியில் சேர்ந்தான். கல்லூரிக்கு சென்ற சில நாட்களில் வேறொரு பெண்ணை காதலிப்பதாக சொன்னான். மீண்டும் அறிவுரை தான் சொன்னேன். ஏற்கவில்லை அவனது மனம்.
நான் அவனிடம் ஒரு கேள்வி கேட்டேன். எற்காக காதலிக்கிறாய் என்றேன்.அவன் சொன்ன பதிலில் முட்டாள்தனமே தெரிந்தது. அக்கா என் ஜாதகத்தில் காதல் திருமணம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் நான் காதலிக்கிறேன் என்றான்.
இந்த பெண்ணிடம் தோல்வி என்றால் வேறொரு பெண். இப்படியே காதல் ஜெயிக்கும் வரை இது இல்லையென்றால் இன்னொன்று என்று சென்றுக்கொண்டே இருக்கவேண்டும் அக்கா என்றான். இதை கேட்ட எனக்கு கோபம் தான் வந்தது. ஆனாலும் கோபத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தேன். இதுபோல் இருக்கும் சிலர் அடிப்பட்டால் தான் திருந்துவார்கள் என்றபடி விட்டுவிட்டேன்.
மற்றொரு பக்கம் நேரத்தை கழிப்பதற்காகவே காதல் என்ற பெயரை உபயோகிக்கிறார்கள். ஆண், பெண் நட்பிலும் சரி காதலிலும் சரி உண்மை என்ற ஒன்று படிப்படியாக குறைந்துக்கொண்டே வருகிறது. இருபது வயது இளைஞன் ஒருவன் தன் நண்பனிடம் சொல்கிறான், டேய் அந்த பெண் அழகாக இருக்கிறாள். அவளிடம் பேசி நண்பனாகிவிட வேண்டும் எப்படியாவது. அவன் சொன்னதை போல் அப்பெண்ணிடம் பேசினான். நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. கைகளுக்கும், கைப்பேசிக்கும் இடைவெளி இல்லாமல், உறக்கம் இல்லாமல் எப்போதும் பேச்சு தான். ஒரு நாள் அவர்களுக்குள் சின்ன சண்டை. பிரிந்துவிட்டார்கள். அந்த இளைஞன் மீண்டும் தன் நண்பனிடம் சொல்கிறான், அப்பாடா.....சனியன் விட்டுச்சு டா.
ஏதோ அழகா இருக்கிறாள் என்று சும்மா அவள் பின்னாடி சுற்றினேன்.அவளை விட்டுவிட்டேன். இப்போது தான் எனக்கு நிம்மதியாக உள்ளது. தொலைந்தது சனியன். வா நம்ம வேறொரு பெண்ணை பார்ப்போம் என்று சந்தோஷமாக சொல்லிக்கொண்டிருந்தான். இதில் அப்பெண் மட்டுமே மனதளவில் பாதிக்கப்படுகிறாள். பெண்ணை ஒரு போதை பொருளாகவே பார்க்கிறார்கள் பலரும்.
காலமும், நேரமும் வேகமாக சென்றுக்கொண்டிருக்கிற இக்காலக்கட்டத்தில், காதலும், கல்யாணமும் அதை விட வேகமாக சென்றுக்கொண்டிருக்கிறது. ஆண், பெண் பருவ காதலில் ஆண் கேட்பது, நீ என்னை உண்மையாக காதலித்தால் எனக்கு ஒரு முத்தம் கொடு என்பான். பெண் பிள்ளைகள் எப்போதும் கேட்பதை விட அதிகமாக கொடுப்பார்கள். அன்பானாலும், அடியானாலும். அவன் ஒன்று கேட்டால் இவள் பத்து கொடுப்பாள். இப்படி முத்தத்தில் தொடங்கி கல்யாணம், குழந்தை, பேரக்குழந்தை என்று 70 வயது வரை வாழ்ந்துவிட்டு விவாகரத்தும் வாங்கிவிடுகிறார்கள், கைபேசியில். குடும்ப வாழ்க்கை அனைத்தும் ஒரு கைபேசியில் அடங்கிவிடுகிறது. இப்படியாக செல்கிறது இன்றைய காதல். ஒரு படத்தில் வரும் வசனம் போல் தான் இன்றைய இளைஞர்களின் காதலும் மாறிவிட்டன.
ஒரு ஆணும், பெண்ணும் பேசினால் காதல்
பழகினால் காதல்
இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்தால் காதல்
உதவி செய்தால் காதல்
ஜன்னல் வழியே பார்த்தால் காதல்
நன்றி சொன்னால் காதல்
மன்னிப்பு கேட்டால் காதல்
திரும்பிப் பார்த்தால் காதல்
திரும்பிப் பார்க்கவில்லை என்றாலும் காதல்
சிரித்தால் காதல்
முறைத்தால் காதல்

குறிப்பாக பெண்களுக்கு....காதல் என்ற பெயரில் உடலுறவுக்கு அழைத்தால் யோசிக்காமல் கண்டிப்பாக முடியாது என்று மறுத்துவிடுங்கள்.
மனக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். எதையும் முடிவு செய்வதற்கு முன் பத்து முறை யோசித்து செயல்படுங்கள்.
"ஆணுக்கும் பெண்ணுக்கும்
அன்பையே போதிக்கும்
காதல் தினம் தேவை"
No comments:
Post a Comment