இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதைக் கூற முடியும்?
இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டி.என்.ஜா.
சமீபத்தில் இவர் எழுதிய 'Against the grain' நூலானது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.மின்னஞ்சலில் பிபிசி இந்திய மொழிகளின் ஆசிரியர் ரூபா ஜா அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த டி.என்.ஜா பழங்கால இந்தியா, சமூக நல்லிணக்கம், இந்து மதம், முஸ்லிம் மன்னர்கள் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

பழங்கால இந்தியா என்பது சமூக நல்லிணக்கம் நிறைந்து பொற்காலமாக இருந்தது....அதற்குப்பின் இடைக்காலத்தில் இஸ்லாமிய அரசர்களின் ஆட்சியின்போதுதான் பயங்கரவாதம் இந்தியாவில் தலை தூக்கியது என இந்துத்துவவாதிகள் கூறுகின்றனர். இதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உள்ளனவா?
இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை. வரலாற்று ஆதாரங்களில் இது தெளிவாக தெரியவருகிறது. பழங்கால இந்தியாவை சமூக நல்லிணக்கமும் அமைதியும் நிறைந்ததாக கருத முடியாது. அச்சமயங்களில் வலுவான சாதி நடைமுறை இருந்ததற்கு ஆதாரம் உள்ளது. பிராமணர்கள் அல்லாதவர்கள் குறிப்பாக சூத்திரர்கள் அதாவது தீண்டத்தகாதோர் என அழைக்கப்பட்டோர் சமூக, சட்ட, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்தனர். இதற்கு விரிவான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக பண்டைய இந்திய சமூகத்தில் பதட்டம் நிறைந்த சூழல் நிலவியது.
தற்போது அம்பானிகளும் அதானிக்களும் உள்ளது போல அப்போது உயர் சாதியினரும் நிலப்பிரபுக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்ந்தனர். இதை வைத்து பார்த்தால் அச்சமூகத்தினர் எப்போதும் பொற்காலத்தில் திளைத்தனர் என்பதை மறுக்க முடியாதுதான்.
பண்டைய இந்தியா பொற்காலம் நிலவிய ஒன்றாக இருந்தது என்ற கருத்தாக்கம் 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது. குப்தர்களின் ஆட்சிக்காலத்தை பொற்காலமாகவும் தேசியத்துவம் நிறைந்ததாகவும் வர்ணித்தனர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் தேசியத்துவத்தை குப்தர்கள் புதுப்பித்தனர் என்பதை விட தேசியத்துவத்தால் குப்தர்கள் பலன் பெற்றனர் என்பதே சரி என்கிறார் வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி. சமூக அமைதியுடன் கூடிய பொற்காலம் என்ற கருத்தாக்கம் இந்தியாவிலும் அதே சமயம் பிற நாடுகளிலும் வரலாற்று அறிஞர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டது.
சீர்திருத்தவாதிகள் என அழைக்கப்படுபவர்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களை அரக்கர்கள் போன்று சித்தரித்த நிகழ்வும் 19ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தது. தயானந்த சரஸ்வதி (1824-1883) தனது சத்யார்த்த பிரகாஷிகா என்ற நூலில் இரு அத்தியாயங்களை இஸ்லாமிய, கிறித்துவ டெனிக்ரேஷன் என்றே ஒதுக்கினார். விவேகானந்தர் (1863-1902) பசிபிக் கடல் பகுதியிலிருந்து அட்லாட்ண்டிக் பகுதி வரை 500 ஆண்டுகளுக்கு ரத்த ஆறு ஓடியதாகவும் இதற்கு இஸ்லாம்தான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய ஆட்சியாளர்களை இழிவு படுத்தும் போக்கு இன்றைய இந்துத்துவவாதிகள் வரை தொடர்கிறது. இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களை தங்கள் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றியதாகவும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கோயில்களை இடித்து தள்ளியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனால் இது போன்ற பரப்புரைகளை தாரா சந்த், முகமது ஹபிப், இர்ஃபான் ஹபிப், ஷிரீன் மூஸ்வி, ஹெர்பான்ஸ் முகியா, ஆட்ரி ட்ரஸ்க் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இஸ்லாமிய மன்னர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டதாகவும் இதற்கு அப்போதைய அரசியல் சூழல்கள் தந்த ஊக்கமே காரணம் என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் காலனி ஆதிக்க காலத்திற்கு முன்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கடும் மோதல் போக்கு காணப்பட்டது என்பதற்கு பெரிய ஆதாரங்கள் ஏதுமில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சமஸ்கிருதம் அடிப்படையிலான இந்து கலாசாரம் துளிர் விட்டதே முகலாயர் காலத்தில்தான் என்கின்றனர் அவர்கள்.
*********************************************************************************
No comments:
Post a Comment