வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்து வருகை தரும் தலைவர்கள் இந்தியா புத்துயிர் பெற்றுவிட்டது என்று பட்டுக் கம்பளத்தில் நின்று பாராட்டு உரை படித்துவிட்டு போகிறார்கள்.
             கந்து வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒவ்வொரு அரைமணி நேரத்திலும் எங்காவது ஒரு மூலையில் ஒரு விவசாயி  தற்கொலை செய்கிறான். பசியிலும், பட்டினியாலும் இன்றும் இறப்புகள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. பொருட்களின் தரத்தைவிட விலைவாசி பன்மடங்கு உயர்ந்து நிற்கிறது. இன்னும்  மருத்துவமனைகளில் அடிப்படை வசதி கூட இல்லை. கேட்டால் பணம் இல்லயாம்.
              உண்மையான நிலை இப்படி இருக்க, கடல் கடந்து வந்த தலைவர்களும் இங்கே  இருக்கும் உள்நாட்டு தலைவர்களும் இந்தியா முன்னேறிவிட்டது என்கிறார்களே, ஒரு வேலை இந்த தலைவர்களுக்கு ஏதாவது பார்வைக் கோளாறா?  அல்லது வறுமையை மட்டும் பார்க்கும் நமக்கு ஏதாவது மூளைக் கோளாறா?
             1990 கு முன்பு இருந்த இந்தியாவோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியா முன்னேறி இருப்பதாகவே  தோன்றுகிறது. தலைவர்கள்  சொல்வது சரியாக இருக்கக்கூடுமோ என்ற மயக்கமும் ஏற்படுகிறது.
             உலகின் ஒரே வல்லரசாக, அசைக்க முடியாத சக்தியாக அமெரிக்கா எழுந்து நிற்பதற்கு என்ன காரணம்? அந்த  ஆரம்பகால வரலாற்றை தவிர்த்துவிட்டு அதன் அடிப்படை சித்தாந்தத்தை மட்டும் காணும்போது அயல் நாட்டிலிருந்து வருபவராக  இருந்தாலும், உள்நாட்டிலேயே இருப்பவராக இருந்தாலும் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ற தொழில்களைச் செய்ய சகல விதத்திலும் அரசாங்கம் உதவி செய்தது. வெளிநாட்டு மூலதனத்தை வரவேற்கும் அதே நேரத்தில் அந்நியப் பொருட்களின் முதலீட்டை பெருமளவு தவிர்ப்பது . இது தான் அந்த நாட்டின் ஏகபோக வளர்ச்சிக்கு ஆதாரம் என்று  சொல்லலாம். நாட்டினுடைய இயற்கை வளங்களும் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு நாடு செழுமைப்பட்டது.
            ஆனால், நம் நாட்டின் நிலைமையோ தலைகீழானது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது சில அடிப்படை தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். முதலில் மக்களின் கல்வித் தரம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதாவது படித்தவர்கள், பட்டதாரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வித் தரத்தை கணக்கிடக் கூடாது. மாணவர்களின் புதியனவற்றை உருவாக்கும் அறிவுத் திறமையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட வேண்டும். அடுத்ததாக, படித்து முடித்து வெளியேறுகின்ற தலைமுறையினர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பது உத்திரவாதத்துடன் இருக்க வேண்டும்.
             மிக முக்கியமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்த நிலையிலும்  முன்னோக்கிச் செல்வதாக இருக்க வேண்டுமே தவிர ஏற்ற இறக்கத்தோடு இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு இக்கட்டான சூழலில் சர்வதேசச் சமூகம் பொருளாதாரத் தடை விதித்தால் கூட அதை சில வருடங்கள் ஆனாலும் தாக்குப் பிடிக்கும் வலுவோடு நாட்டுப் பொருளாதாரம் இருக்க வேண்டும்.
             பொருளாதார வளர்ச்சிக்காகத் தானே மத்திய அரசு சாகர்மாலா திட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்கிறது என்று கேட்கலாம். கண்டிப்பாக இத்திட்டத்தின் மூலம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது உச்சத்தை தொடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், கடலோரங்களில் குடியிருக்கும் மீனவர்களின் நிலைமை, கடலையே நம்பியிருக்கும் அவர்களின் வாழ்வாதாரமும், தொழிலும் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்று சொல்வதை விட முற்றிலுமாக அழிந்து விடும் என்றே சொல்லலாம். ஒரு இனத்தையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து திட்டங்களை  செயல்படுத்துவது தான் நம் நாட்டின் அரசாங்கம்.
            அரசியல் என்பது சாக்கடை தான் என்றாலும் கூட நாட்டின் நிர்வாகத்தைச் சீரழிக்கும் அளவிற்கு  அதன் வேகம் போக கூடாது. முன் எப்போதும் இல்லாததை விட இப்போது விவசாயத் தொழில் பெரிய பின்னடைவை எதிர் நோக்கி உள்ளது. அசுர வேகத்தில் ஆற்று மணல் படுகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இனி கொள்ளையடிக்க கூட மணல்  இருக்காது.
             சில மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லை, சாலை வசதி இல்லை, இன்னும் சில கிராமங்களில் பள்ளிக்கூடமும் இல்லை. பல அரசு   பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. அரசு பேருந்துகள் ஆஹா.....சொல்லவே வேண்டாம். எதாவது கேள்வி கேட்டல் நிதி இல்லை என்று ஒரே பதில் . சரி ஒதுக்கப்பட்ட நிதி எங்கே  சென்றது?  தான் மட்டும் நல்லாருக்க வேண்டும் என்ற எண்ணமே நிதியை ஊழலாக மாற்றி வைக்கிறது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற உறுதி படைத்த  தலைவர்கள் இருந்திருந்தால் இன்று உலகமே கைகொட்டிச் சிரிக்கும் அலைக்கற்றை ஊழல் நடந்திருக்காது. 2 ஜி அலைக்கற்றைகளை வாங்கிய நிறுவனங்கள் சம்பாதித்த தொகை முழுவதும் நாட்டு நலத்திட்டங்களில் செலவிடப்பட்டிருந்தால் பாதி  இந்தியாவை ஜப்பானாக்கி இருக்கலாம். டாட்டா டெலி  சர்வீஸ் நிறுவனம் 1667 கொடிக்கான உரிமத்தில் வெறும் 25 சதவீதத்தை டோகோமோ நிறுவனத்திற்கு 13000  கோடி ரூபாய்க்கு  விற்பனை செய்துள்ளது. ஒரே வாரத்திலேயே இத்தனை கோடி ரூபாய்களை சம்பாதிக்க முடியும் என்று தனியார் முதலாளிகளுக்கு தெரிந்த விஷயம் அரசுத் தலைவர்களுக்கு  தெரியாது என்றால் அதை நம்புவதற்கு இந்தியர்கள் மடயர்களாகத் தான் இருக்க வேண்டும்.
           இது போன்று எத்தனையோ ஊழல்கள் நம் நாட்டின் வளச்சியை முடக்கி வைத்திருக்கிறது. இந்த ஊழல் முன்னாள் அரசாங்கம் ஏற்பாடு செய்யும் விசாரணைக்  குழுக்கள் எதுவும்  உருப்படியான செயலைச் செய்துவிட  இயலாது. இந்திய மக்களின் சக்தி தான் தவறுகளுக்கு எல்லாம் மூலமாக இருக்கும் ஆதிக்கக் கும்பல்களின் அதிகார வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலும். அப்படி முடிவுக்கு வராத வரையில் இந்தியா வளர்ந்த நாடு அல்ல, வளரும் நாடு அல்ல,  சுரண்டல் அல்லது ஏமாளிகள் நாடு. 
  ******************************ஜெய்ஹிந்த்***********************************
Share:

இந்திய பொற்காலம் (India porkaalam)

    

     இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதைக் கூற முடியும்?

     இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டி.என்.ஜா.

சமீபத்தில் இவர் எழுதிய 'Against the grain' நூலானது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
மின்னஞ்சலில் பிபிசி இந்திய மொழிகளின் ஆசிரியர் ரூபா ஜா அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த டி.என்.ஜா பழங்கால இந்தியா, சமூக நல்லிணக்கம், இந்து மதம், முஸ்லிம் மன்னர்கள் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

'இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை' - விளக்கும் வரலாற்றாசிரியர்
பழங்கால இந்தியா என்பது சமூக நல்லிணக்கம் நிறைந்து பொற்காலமாக இருந்தது....அதற்குப்பின் இடைக்காலத்தில் இஸ்லாமிய அரசர்களின் ஆட்சியின்போதுதான் பயங்கரவாதம் இந்தியாவில் தலை தூக்கியது என இந்துத்துவவாதிகள் கூறுகின்றனர். இதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உள்ளனவா?

இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை. வரலாற்று ஆதாரங்களில் இது தெளிவாக தெரியவருகிறது. பழங்கால இந்தியாவை சமூக நல்லிணக்கமும் அமைதியும் நிறைந்ததாக கருத முடியாது. அச்சமயங்களில் வலுவான சாதி நடைமுறை இருந்ததற்கு ஆதாரம் உள்ளது. பிராமணர்கள் அல்லாதவர்கள் குறிப்பாக சூத்திரர்கள் அதாவது தீண்டத்தகாதோர் என அழைக்கப்பட்டோர் சமூக, சட்ட, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்தனர். இதற்கு விரிவான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக பண்டைய இந்திய சமூகத்தில் பதட்டம் நிறைந்த சூழல் நிலவியது.

தற்போது அம்பானிகளும் அதானிக்களும் உள்ளது போல அப்போது உயர் சாதியினரும் நிலப்பிரபுக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்ந்தனர். இதை வைத்து பார்த்தால் அச்சமூகத்தினர் எப்போதும் பொற்காலத்தில் திளைத்தனர் என்பதை மறுக்க முடியாதுதான்.

பண்டைய இந்தியா பொற்காலம் நிலவிய ஒன்றாக இருந்தது என்ற கருத்தாக்கம் 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது. குப்தர்களின் ஆட்சிக்காலத்தை பொற்காலமாகவும் தேசியத்துவம் நிறைந்ததாகவும் வர்ணித்தனர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் தேசியத்துவத்தை குப்தர்கள் புதுப்பித்தனர் என்பதை விட தேசியத்துவத்தால் குப்தர்கள் பலன் பெற்றனர் என்பதே சரி என்கிறார் வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி. சமூக அமைதியுடன் கூடிய பொற்காலம் என்ற கருத்தாக்கம் இந்தியாவிலும் அதே சமயம் பிற நாடுகளிலும் வரலாற்று அறிஞர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டது.

சீர்திருத்தவாதிகள் என அழைக்கப்படுபவர்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களை அரக்கர்கள் போன்று சித்தரித்த நிகழ்வும் 19ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தது. தயானந்த சரஸ்வதி (1824-1883) தனது சத்யார்த்த பிரகாஷிகா என்ற நூலில் இரு அத்தியாயங்களை இஸ்லாமிய, கிறித்துவ டெனிக்ரேஷன் என்றே ஒதுக்கினார். விவேகானந்தர் (1863-1902) பசிபிக் கடல் பகுதியிலிருந்து அட்லாட்ண்டிக் பகுதி வரை 500 ஆண்டுகளுக்கு ரத்த ஆறு ஓடியதாகவும் இதற்கு இஸ்லாம்தான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய ஆட்சியாளர்களை இழிவு படுத்தும் போக்கு இன்றைய இந்துத்துவவாதிகள் வரை தொடர்கிறது. இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களை தங்கள் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றியதாகவும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கோயில்களை இடித்து தள்ளியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனால் இது போன்ற பரப்புரைகளை தாரா சந்த், முகமது ஹபிப், இர்ஃபான் ஹபிப், ஷிரீன் மூஸ்வி, ஹெர்பான்ஸ் முகியா, ஆட்ரி ட்ரஸ்க் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
'இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை' - விளக்கும் வரலாற்றாசிரியர்
 இஸ்லாமிய மன்னர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டதாகவும் இதற்கு அப்போதைய அரசியல் சூழல்கள் தந்த ஊக்கமே காரணம் என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் காலனி ஆதிக்க காலத்திற்கு முன்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கடும் மோதல் போக்கு காணப்பட்டது என்பதற்கு பெரிய ஆதாரங்கள் ஏதுமில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சமஸ்கிருதம் அடிப்படையிலான இந்து கலாசாரம் துளிர் விட்டதே முகலாயர் காலத்தில்தான் என்கின்றனர் அவர்கள்.

*********************************************************************************


Share:

நட்பு (Natpu)

                                                "நல்லினத்தாரோடு நட்டல்" 
       நற்குணமுடையவரோடு நட்பு செய்ய வேண்டும். நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தால் அவர் நல்லவர். மறுத்தால் கேட்டவர் என்ற எண்ணமே பலரின் மனதிலும். சேர்ந்து பேசி சிரித்து, பாடிப் பழகி, சுமைகளைப் பகிர்ந்து கொண்டு, சோர்வடையும் போது உற்சாகப்படுத்தி, சின்ன சின்ன சாதனைகளையும் பாராட்டி, நம் தவறுகளைத் தயங்காமல் சொல்லி, வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு துணையாய் நம்மோடு நடந்து வருபவர்கள் தான் நல்ல நண்பர்கள். இன்றைய நட்பு இப்படி தான் இருக்கிறதா? இல்லை. நண்பர்களால் தான் முன்னேறினான் என்ற சொன்ன காலமெல்லாம் சென்று விட்டது. இன்றோ.....இவனை கெடுப்பதே இவனுடைய நண்பர்கள் தான். நண்பர்களால் தான் கெட்டுப்போகிறான் என்று ஒவ்வொரு வீட்டிலும் புலம்பல்கள் தான். 
                         " நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
                          மேற்செனறு இடித்தற் பொருட்டு".  
                                  (குறள் )

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்குமாம், என்றார் திருவள்ளுவர். 
       நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. நட்பு வளர்ந்த பிறகு முன்பு தெரியாத விஷயங்கள் தெரிய வரலாம். பிடிக்காத சில விஷயங்கள் நம் பார்வைக்கு தென்படலாம். பிடித்ததை ஏற்று, பிடிக்காததை வெளிப்படையாக சொல்வதில் தவறில்லை. நீ செய்வது தவறு, இதை மாற்றிக்கொள், இதை தவிர்த்துவிடு என்று இதமாய் சொல்லி புரியவைத்து நட்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, நட்பே வேண்டாம் என முறித்துக்கொண்டு போவது மூடத்தனம். சிலர் நட்பு என்ற பெயரில் புகைப்பிடிப்பவர்களையும், மது அருந்துபவர்களையும், தீய பழக்கத்திற்கு தன்னையும் வழி நடத்துபவர்களையுமே தனது சிறந்த நண்பர்கள் என்று சொல்லித்திரிகிறார்கள். நண்பன் என்பவன், தான்  சரியான பாதையில் செல்லாதபோது அதனை எடுத்துரைத்து நல்வழிக்கு திருப்புபவனே சிறந்த நண்பன். 
        அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சில மருத்துவர்கள் பல்லாண்டுகள் நடந்த ஆய்விற்கு பின் ஒரு அறிக்கையை அறிவித்தார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரை, அழுத்தம், கொழுப்பு, போன்றவை எல்லாம் நல்ல நட்புகள் உள்ளோருக்கு சரியான அளவிலும், நட்புகள் இல்லாதோருக்கு ஆபத்தான அளவுக்கு மிகுந்தும் இருப்பதைத் தாங்கள் கண்டதாக சொன்னார்கள். எனவே, நல்ல நட்புகளை கவனமாய் வளர்க்க வேண்டும். 
நம் நட்புகளுக்கும் நேரம் ஒதுக்குவோம்.  
       உலகத்தில் சிறந்த விஷயம் எதுவென்றால் மற்றவர்களுக்கு நன்றி செலுத்துவது தான். நட்பில் ஒருவருக்கொருவர் உதவி செய்து, நன்றி சொல்லும் போது, நமக்குள் எதற்கு நன்றி ? என்று கேட்பார்கள். தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்கிறோம். அது போல தான் நன்றியும். நட்பாக இருந்தாலும் நன்றி சொல்லி பழக வேண்டும். இன்று....எல்லா உறவுகளிலும் மன்னிப்பு என்ற வார்த்தையே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது, நட்பிலும் கூட. உங்கள் நண்பர்களோடு மனந்திறந்து வெளிப்படையாய் பேசும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தவறு என்று உன் மனதிற்கு தோன்றினால் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். நன்றி சொல்லவும் யோசிக்காதீர்கள்.  மன்னிப்பு கேட்கவும் தெரியணும். கொடுக்கவும்  தெரியணும்.
       "நண்பர்களால் விளையும் காயங்களை மணலில் எழுத வேண்டும்.மன்னிப்பு எனும் காற்று வீசி அவற்றை அழித்து விடும். நண்பர்கள் நமக்கு செய்யும் நன்மைகளை பாறையில் எழுத வேண்டும். எந்தக் காற்றும், புயலும் அவற்றை அழித்து விடாமல்."  
           
                            ********நட்பை வளர்ப்போம்*******
        
Share:

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages