நட்பு (Natpu)

                                                "நல்லினத்தாரோடு நட்டல்" 
       நற்குணமுடையவரோடு நட்பு செய்ய வேண்டும். நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தால் அவர் நல்லவர். மறுத்தால் கேட்டவர் என்ற எண்ணமே பலரின் மனதிலும். சேர்ந்து பேசி சிரித்து, பாடிப் பழகி, சுமைகளைப் பகிர்ந்து கொண்டு, சோர்வடையும் போது உற்சாகப்படுத்தி, சின்ன சின்ன சாதனைகளையும் பாராட்டி, நம் தவறுகளைத் தயங்காமல் சொல்லி, வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு துணையாய் நம்மோடு நடந்து வருபவர்கள் தான் நல்ல நண்பர்கள். இன்றைய நட்பு இப்படி தான் இருக்கிறதா? இல்லை. நண்பர்களால் தான் முன்னேறினான் என்ற சொன்ன காலமெல்லாம் சென்று விட்டது. இன்றோ.....இவனை கெடுப்பதே இவனுடைய நண்பர்கள் தான். நண்பர்களால் தான் கெட்டுப்போகிறான் என்று ஒவ்வொரு வீட்டிலும் புலம்பல்கள் தான். 
                         " நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
                          மேற்செனறு இடித்தற் பொருட்டு".  
                                  (குறள் )

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்குமாம், என்றார் திருவள்ளுவர். 
       நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. நட்பு வளர்ந்த பிறகு முன்பு தெரியாத விஷயங்கள் தெரிய வரலாம். பிடிக்காத சில விஷயங்கள் நம் பார்வைக்கு தென்படலாம். பிடித்ததை ஏற்று, பிடிக்காததை வெளிப்படையாக சொல்வதில் தவறில்லை. நீ செய்வது தவறு, இதை மாற்றிக்கொள், இதை தவிர்த்துவிடு என்று இதமாய் சொல்லி புரியவைத்து நட்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, நட்பே வேண்டாம் என முறித்துக்கொண்டு போவது மூடத்தனம். சிலர் நட்பு என்ற பெயரில் புகைப்பிடிப்பவர்களையும், மது அருந்துபவர்களையும், தீய பழக்கத்திற்கு தன்னையும் வழி நடத்துபவர்களையுமே தனது சிறந்த நண்பர்கள் என்று சொல்லித்திரிகிறார்கள். நண்பன் என்பவன், தான்  சரியான பாதையில் செல்லாதபோது அதனை எடுத்துரைத்து நல்வழிக்கு திருப்புபவனே சிறந்த நண்பன். 
        அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சில மருத்துவர்கள் பல்லாண்டுகள் நடந்த ஆய்விற்கு பின் ஒரு அறிக்கையை அறிவித்தார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரை, அழுத்தம், கொழுப்பு, போன்றவை எல்லாம் நல்ல நட்புகள் உள்ளோருக்கு சரியான அளவிலும், நட்புகள் இல்லாதோருக்கு ஆபத்தான அளவுக்கு மிகுந்தும் இருப்பதைத் தாங்கள் கண்டதாக சொன்னார்கள். எனவே, நல்ல நட்புகளை கவனமாய் வளர்க்க வேண்டும். 
நம் நட்புகளுக்கும் நேரம் ஒதுக்குவோம்.  
       உலகத்தில் சிறந்த விஷயம் எதுவென்றால் மற்றவர்களுக்கு நன்றி செலுத்துவது தான். நட்பில் ஒருவருக்கொருவர் உதவி செய்து, நன்றி சொல்லும் போது, நமக்குள் எதற்கு நன்றி ? என்று கேட்பார்கள். தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்கிறோம். அது போல தான் நன்றியும். நட்பாக இருந்தாலும் நன்றி சொல்லி பழக வேண்டும். இன்று....எல்லா உறவுகளிலும் மன்னிப்பு என்ற வார்த்தையே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது, நட்பிலும் கூட. உங்கள் நண்பர்களோடு மனந்திறந்து வெளிப்படையாய் பேசும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தவறு என்று உன் மனதிற்கு தோன்றினால் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். நன்றி சொல்லவும் யோசிக்காதீர்கள்.  மன்னிப்பு கேட்கவும் தெரியணும். கொடுக்கவும்  தெரியணும்.
       "நண்பர்களால் விளையும் காயங்களை மணலில் எழுத வேண்டும்.மன்னிப்பு எனும் காற்று வீசி அவற்றை அழித்து விடும். நண்பர்கள் நமக்கு செய்யும் நன்மைகளை பாறையில் எழுத வேண்டும். எந்தக் காற்றும், புயலும் அவற்றை அழித்து விடாமல்."  
           
                            ********நட்பை வளர்ப்போம்*******
        
Share:

சின்ன வெங்காயம் (chinna vengayam)

       சின்ன வெங்காயம் பல மகத்துவங்கள் வாய்ந்தது.  மிகவும் குளிர்ச்சி வாய்ந்த இந்த சின்ன வெங்காயம் சளிக்கு சிறந்த மருந்து என்று எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. என்னது.....சளி  இருக்கும் போது இதை சாப்பிடலாமா என்ற கேள்வியே பலரின் மனதிலும் தோன்றும். நானும் அப்படி தான் நினைத்தேன்.ஆனால் "முள்ளை முள்ளால் எடு" என்ற பழமொழிப்படி பார்த்தால் இதுவும் சளிக்கு சிறந்த மருந்து தான் என்பதை நீங்களும் உணர்வீர்கள். 
       ஒரு நாள் இரவு என் மாமா தயிர் சாப்பாட்டில் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா இது....இரவு நேரமாக இருக்கிறதே, அதுவும் தயிரில் சின்ன வெங்காயம், உடம்புக்கு ஏதாவது வருமோ? என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பின் மாமா பேச்சு எடுத்தார் சின்ன வெங்காயம் சளி தொல்லையிலிருந்து காப்பாற்றும் என்றார். நான் நம்பவில்லை. சரி ஒரு நாள் சாப்பிட்டு தான் பார்ப்போமே என்று நானும் சாப்பிட்டேன். உடனடி நிவாரணம். 
       அதாவது சளி பிடித்திருந்தால் குளிச்சியான பொருளை சாப்பிட்டால் நின்றுவிடும். என்ன சொல்கிறீர்கள்....ஏற்கனவே சளி, இதுல குளிச்சியானா பொருளா? என்று கேட்டால், ஆமாம் என்று தான் சொல்லுவேன். எலுமிச்சை பழம் பிழிந்து கூட குடிக்கலாம். ஜில் தண்ணீரில் போட்டு குடிக்கக்கூடாது. (குளிச்சியான பொருளை சாப்பிட சொன்னீர்கள். இப்போது ஜில் தண்ணீர் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்) அதற்காக தான் ஜில் தண்ணீர் என்று சொன்னேன். குளிச்சியான தண்ணீர் என்று நான் சொல்லவில்லை. ஆம். ஐஸ் கட்டி, ஐஸ் தண்ணீர், ஐஸ் கிரீம் இவை எல்லாம் நம் உடம்பிற்கு சூடான பொருள்கள் தான்.
       உடம்பில் குளுமை அதிகமாகும் போது சளி பிடிக்கிறது. குளுமையான பொருளை சாப்பிட்டால் சரியாகிவிடும். அதிலும் இந்த சின்ன வெங்காயம் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. ஒருவருக்கு பாம்பு கடித்தால், விஷத்தை கொடுத்து தான் அந்த விஷத்தையும் முறிப்பார்கள். அது போல தான் இதுவும். இனி சளி பிடித்திருக்கிறது என்று எந்த பழத்தையும் ஒதுக்க வேண்டாம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
       


Share:

விழிப்புணர்வு (Vizhipunarvu)

      பெண்ணுரிமை, பெண்சுதந்திரம் பற்றி வெறும் வாயால் பேசிக்கொண்டே இருக்கலாம். உரிமையும், சுதந்திரமும் அதிகமாக அதிகமாக அவர்களின் பாதுகாப்பு என்பது குறைந்து கொண்டே தான் வருகிறது. "இன்றைய சமுதாயத்தல் பெண்களின் நிலை"  என்ற புத்தகத்தில் பெண்களின் இன்றைய நிலையைப் பற்றி அழகாக விளக்கியுள்ளார் "விக்னா பாக்கியநாதன்" . ஆண்களுக்கு நிகராக இன்று பெண்களும் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இருந்தாலும் அவர்களின் விழிப்புணர்வு பற்றி பேசும் பொது இன்னும் அடிமட்டத்தில் தான் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பெண்  பிள்ளைகள் படித்து என்ன செய்ய போகிறது என்ற எண்ணம் பல இடங்களில் பல பேருக்கும் இருக்கிறது. அதனால் தான் அவர்களின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணம்  செய்துவைத்து வேறு வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்யக்கூடாது என்கிறது சட்டம். ஆனால் சட்ட விரோதமாகத்தான் பல விஷயங்களும் நடந்துக்கொண்டிருக்கின்றன. பெண்கள் என்னதான் முன்னேறி வருகிறார்கள் என்று சொன்னாலும், அறிவிலும், விழிப்புணர்வில் பின் தங்கி தான் இருக்கிறார்கள் என்பதற்கு நான் கண்ட சிலவற்றை கூறுகிறேன்.
     நானும் என் அம்மாவும் தெரிந்த ஒருவரிடம் வீட்டு வேலைக்கு ஆள் தேவை என்று தெரிவிக்கச் சென்றோம். அவர் கணவனை இழந்த 55 வயது பெண். அவருக்கு இரு மகள்கள். மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். இளைய பெண் எங்கே எனக்கேட்டோம். அவள் இங்கு தான் இருக்கிறாள் என்றார். பள்ளிக்கு செல்லவில்லையா என கேட்டோம். பத்தாம் வகுப்பு வரை படித்தால். படித்தது போதும் என்று நிறுத்திவிட்டேன் என்றார் அப்பெண்ணின் அம்மா. ஏன் இப்படி? அவளை பள்ளிக்கு அனுப்புங்கள் என சொன்னதுக்கு அந்த அம்மா சொன்ன பதில், உன்னைப்போல் என் மகளும் ஒல்லியாக இருந்தால் பரவலையம்மா. இவள் கொஞ்சம் வாட்ட சாட்டமா இருக்கா அதனால் வெளியில் அனுப்புவதற்கு பயமாக உள்ளது என்று அவர்கள் சொன்னவற்றில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற பயமே மேலோங்கி நின்றாலும், விழிப்புணர்வு போதவில்லை என்றே சொல்லலாம். என் பார்வையில் அவர்களின் முட்டாள்தனமே தெரிந்தது
     சமீபத்தில் வெளியான தகவல், ஒரு இளைஞன் facebook என்று சொல்லப்படும் முகநூலில் 20 பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியுள்ளான். ஒரு பெண்ணிடம் எப்படியெல்லாம் பேசினால் அவள் சிக்கிவிடுவாள் என்பதை அந்த இளைஞன் நன்றாக புரிந்துவைத்திருக்கிறான். இப்படிப்பட்ட பெண்களை படித்த முட்டாள்கள் என்று சொல்வதா? அவர்களின் அறியாமை என்று சொல்வதா? "privacy" என்ற பெயரில் இவர்கள் செய்யும் அக்கப்போர் அப்பப்பா.....ஒரு பெண்ணின் தனிப்பட்ட விஷயங்களை பார்ப்பது என்பது தவறான ஒன்றே. ஆனால் தன்னை பெற்றெடுத்த தாய், தந்தையிடம் அனைத்தையும் சொல்லலாமே. 
     இது போன்ற ஏமாற்று வேலைகள் தான் இன்று அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக காதல் என்ற பெயரில் தான் . இரண்டு நாட்களுக்கு முன்பாக கூட ஒரு ஆண் தனக்கு திருமணமானதை மறைத்து வேறொரு பெண்ணை ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் திருமணமும் செய்துகொண்டு கடைசியில் அப்பெண்ணை கொன்றுவிட்டார். இது போன்று எத்தனையோ சம்பவங்கள் பெண்களை ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கிறது  இச்சமுதாயம். பாதுகாப்பு அற்ற நாட்டில் முதலிடமாக இந்தியா தான் இருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய செய்தி. வயது வரம்பின்றி பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு பெண் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன் கண்மூடித்தனமாக எதையும் நம்பாமல், அதைப்பற்றி பல முறை யோசித்தும், முழுமையாக தெரிந்துக்கொண்டும் செயல்படுவது நல்லது. 

                    *விழித்துக்கொள் உன்னை சுற்றி நடப்பவைகளைப் பார்த்து*.
      
     
Share:

உடலும் உடையும் (Udalum Udaium)

          உடலும் உடையும் என்று சொன்னாலே பெண்களுக்கான உடையைப் பற்றி தான். நடந்தால் குத்தம், நிமிர்ந்தால் குத்தம், குனிந்தாள் குத்தம் என்று ஏற்கனவே பல குத்தங்கள் பெண்களை பற்றி. அதிலும் ஆடை என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது பெண்களுக்கு. அதிலும்  இந்த கிராமப்புறங்களில் அப்பப்பா.....சொல்லவே வேண்டியதில்லை. 
         ஒரு நாள் அவசர வேலையாக சீறி சிங்காரித்து சுடிதார் அணிந்துக்கொண்டு துப்பட்டாவை படத்தில் உள்ளது போல் போட்டுக்கொண்டு சென்றேன். வழியில் இரண்டு பாட்டி அவர்களின் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு என்னை அழைத்தார்கள். என்ன என்று கேட்டேன். "உனக்கு அண்ணன், தம்பி இருக்கிறார்களா?" என்று கேட்டார்கள். இருக்கிறான் என்றேன். துப்பட்டாவை இப்படி அணிந்துகொண்டு போனால் சகோதரனுக்கு ஆகாது , வேறு மாதிரி போட்டுச்செல் என்கிறார்கள். சட்டென்று எரிச்சலும், கோபமும் வந்தது. எரிச்சலோடு சரி என்று வந்துவிட்டேன். இருந்தாலும் பெரியவர்கள் சொன்னால் எதாவது காரணம் இருக்கும் என்று அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் கொண்டேன். அவர்கள் சொன்ன மாதிரி எந்த காரணமும் இல்லை.  சிலரின் வாய்க்கு வேலை இல்லை என்றால் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள் போல. வடிவேல் சொல்வது போல், ரூம் போட்டு யோசிப்பாங்களோ...............????????
        பெண்கள் துப்பட்டா அணிவதற்கு காரணம், சூரிய ஒளியின் தாக்கம் அவர்களின் மார்பகங்களை பாதிக்க கூடாது என்பதற்காக தான். இது பல பெண்களுக்கே தெரியாத ஒன்று. பெண்ணின் முக்கியமான மூன்று உறுப்புகள்,  மார்பகம், பிறப்புறுப்பு, கருப்பை. இவை மூன்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான உறுப்புகள். இவை மூன்றையும் பாதுகாக்க கூடிய சிறந்த ஆடை சேலை தான். சேலையின் கொசவம் அதாவது வயிற்றுப்பகுதியில் மடக்கி சொருகுவார்கள். அது பிறப்புறுப்பு, கருப்பை இரண்டையும் பாதுகாக்கும். அதற்காக தான் நம் கொள்ளுப்பாட்டி காலத்தில் 32 கொசவங்கள் வைத்து சேலை கட்டினார்கள். அது படிப்படியாக குறைந்து இப்போது 3, 4 கொசவங்கள் தான் வைத்து சேலை காட்டுகிறார்கள். இது எப்படி நமது உறுப்பை சூரி ஒளியிலிருந்து காக்கும்?. அதே போல் தான் மாராப்பு என்பது மார்பகங்களை பாதுகாக்க. துப்பட்டாவை இப்படி தான் அணியவேண்டும், அப்படி தான் அணியவேண்டும் என்றெல்லாம் கணக்கில்லை. நம் மார்பகங்களில் வெப்பம் அதிகம் படாமல் பாதுகாத்தால் போதும். அனால்.....இன்றோ அதை ஒரு கவர்ச்சி பொருளாகவும், காட்சி பொருளாகவுமே பார்க்கிறார்கள் பெண்களும் கூட. 
        சில சமயம் மலம் கழிக்கும் போது கூட கருப்பை பாதிப்படியும் என்று சொல்கிறார்கள். சூரியன் கிழக்கு, மேற்காக தோன்றி மறைகிறது அல்லவா. கிழக்கு, மேற்காக உட்கார்ந்து மலம் கழிக்க கூடாது. நேரடியாக சூரிய ஒளி கருப்பையை தாக்கும். அப்படி தாக்கினால், அவர்களுக்கு அடிக்கடி கருப்பை பிரட்சணை வந்துக்கொண்டே இருக்கும். வீட்டின் கழிவறைகள் கூட கிழக்கு, மேற்காக கட்டமாட்டார்கள். அப்படி காட்டினாள் அது தவறானது. ஆண்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையா என்று நினைத்தால் அவர்களுக்கு தான் கர்ப்பப்பை இல்லையே. ஒருவேளை ஆண்குறி பாதிக்கப்படுமோ....??????
                                                       ******வாழ்க வளமுடன்*******

     

        
Share:

மன அழுத்தம் (Stress-Mana Azhutham)

மன அழுத்தம் என்பது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இன்றைய காலத்தில் மன அழுத்தம் இல்லாத ஆட்களே இல்லை. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மன அழுத்தம் சற்று அதிகமாக  இருக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து. மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்களே.
 மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மருந்து விளையாட்டு. சிறு பிள்ளைகளுக்கு மன அழுத்தம் என்றால் என்னவென்றே தெரியாது. ஏனென்றால் அவர்கள் அதிகமாக விளையாடுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஓடி ஆடி விளையாடும் விளையாட்டுகள் குறைந்துவிட்ட காரணத்தால் அவர்களுக்கும் கூட மன அழுத்தம் ஏற்படுகிறது.கைபேசியிலும், கணினியிலுமே அதிக நேரம் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இது கண்டிப்பாக மன அழுத்தத்தை அதிகப்படுத்திடுமே தவிர குறைக்காது. இந்த வயதில் நான் என்ன விளையாடுவது என்று சலிப்புடன் சிலர் சொல்வதுண்டு. உடல்நிலைக்கும், வயதிற்கும் தகுந்தாற் போல் அனைத்து விளையாட்டுகளும் உள்ளது. ஓடி ஆடி விளையாட முடியாதவர்கள் உட்கார்ந்து விளையாடலாமே. உட்கார்ந்து என்றால் கைபேசியிலோ, கணினியிலோ அல்ல. வாரம் ஒரு முறையாவது விளையாடுவதற்கென்று நேரம் ஒதுக்குங்கள். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் விளையாட்டில் பங்கு கொள்ளுங்கள். பிறகு உங்கள் மனதின் மாறுதல்களை நீங்களே உணர்வீர்கள். மன அழுத்தம் மெல்ல குறையும். 
         வற்புறுத்தி யாரையும் எந்த காரியத்தையும் செய்யச் சொல்லாதீர்கள். அதுவே ஒரு மன அழுத்தம் தான். உதாரணமாக படிப்பு. பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை படிக்க விடாமல் அதை படி இதை படி இந்த பிரிவு எடுத்துக்கொள் என்று ஆளுக்கொன்று சொல்வார்களே தவிர உனக்கு எதில் இஷ்டம் என்று கேட்பது சிலரே. இப்படி தின்னிக்கப்படும் பொது தான் அவர்கள் தடுமாறுகிறார்கள்.
       சில பெண்களுக்கு உடலுறவின் போது ஏற்படும் அதிக வழியால் மன அழுத்தம் அதிகரிக்கும். அதன் வெளிப்பாடாக அவர்கள் அசாதாரணமாக நடந்துகொள்வார்கள். பார்ப்பவர்கள், இவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, பேய் பிடித்துவிட்டது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஊராரின் பேச்சை கேட்பதை நிறுத்திவிட்டு மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லதைத் தரும்.
       சாதாரண முடி உதிர்தலிருந்து உயிரைக் கொள்ளும் புற்று நோய் வரை மன அழுத்தம் உண்டாக்குகிறது. மருத்துவரிடம் சென்றால் தூக்க மாத்திரை தான் தருவார்கள். மூளை ஓய்வு எடுப்பதற்காக. எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் நமக்கு நாமே வைத்தியம் செய்யலாம். 
        தியானம் செய்வது ஒரு சிறந்த வைத்தியம். இரவு தூங்கும் முன் ஐந்து நிமிடம் தியானம் செய்துவிட்டு படுங்கள். மனம் விட்டு பேசுங்கள். மனம் விட்டு பேசினால் மட்டுமே எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். குழந்தைகளுடன் பேசி விளையாடுங்கள். வேலையை பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டு பிரச்சனையை அலுவலகத்திலும், அலுவலக பிரச்சனையைவீட்டிலும் காட்டுவதை நிறுத்திவிடுங்கள். இப்படி நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களைக் கொண்டு மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
             **********************************************************************************       

Share:

அன்பு (Anbu)

                                          தேடிதேடிப்போய் 
                                கொட்டிய அன்பு
                                குப்பையைவிட
                                கேவலமானதாகி விடுகிறது.

 
                                                       
                                                   

                                                  

Share:

அண்ணன் (Annan)

என் தாயின் கருவறையில் 
நான் இருக்கும் போது 
உன் குரல் கேட்டதில்லை 
என் அசைவை நீ உணர்ந்ததுமில்லை 
உன் கைகளில் என்னை ஏந்தியதில்லை 
உன் விரல் பிடித்து நடந்ததில்லை 
உன்னுடன் கொஞ்சி விளையாடியதில்லை 
முத்தங்களை நீ அள்ளிக்கொடுக்கவுமில்லை 
நான் வாரி இரைக்கவும் இல்லை 
உன்னுடன் சண்டை போட்டதில்லை 
திருட்டு மாங்காய் உண்டதில்லை 
பசிக்குது என்று நான் சொன்னதும் இல்லை 
பாசிக்குதா என்று நீ கேட்டதும் இல்லை 
உன் அருகில் நான் உறங்கியதில்லை 
என் மடியில் நீ தூங்கியதுமில்லை 
இருவரும் நிலா சோறு உண்டதில்லை 
உன் கண்ணீரை நான் கண்டதில்லை 
என் கண்ணீரை நீ துடைக்கவுமில்லை 
உன் தவறை  நான் மாட்டிவிடவும் இல்லை 
என் தவறை நீ மன்னிக்கவும் இல்லை 
உன் அடி நான் வாங்கியதில்லை 
என் கடி நீ வாங்கியதில்லை
உன் நண்பர்களிடம் நான் பேசியதில்லை 
என் நண்பர்களிடம் உன்னை அறிமுகப்படுத்தியதும் இல்லை 
உன் கைகளால் ஒரு பிடி சோறு ஊட்டிவிட்டதும் இல்லை 
என் கைகளால் ஒரு வாய் சோறு போட்டதும் இல்லை 
உன் தோள் சாய்ந்து நான் அழுதது இல்லை 
என் தோள் பிடித்து நீ நடந்ததுமில்லை 
சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை
தாயும் வேறு தகப்பனும் வேறு 
ஆனாலும் 
ஆழ்மனதிலிருந்து 
அன்போடு அழைக்கிறேன் 
அண்ணா என்று.!
                                                                                                                    என்றும் அன்புடன் 
                                                                                                                               ரேணுகா

Share:

தனிமை (Thanimai)

                   நாம் நம்மோடு சில வேளைகளில் மட்டும் தங்க வேண்டும்.
                   சில வேளைகளில் நாம் நம்மிடமிருந்து தப்பிக்க வேண்டும்.

                            
            "தனிமை தற்கொலைக்கும் தூண்டும்" என்பது பலரும் அறிந்த ஒன்றே. பிள்ளைகள் சுதந்திரமாக இருக்கட்டும் என்று பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு அவர்களுக்கு தனியறை அமைத்து  கொடுப்பது தான். ஆண் பிள்ளையாக இருந்தால் படிப்பதற்கும், பெண் பிள்ளையாக இருந்தால் படிப்பதற்கும், தூங்குவதற்கும் மட்டும் போதுமானது தனியறை. படிக்கும் பிள்ளைகளுக்கு கைபேசி தேவையானது அல்ல. அவசியமும் இல்லை. படிக்க போகிறேன் என்ற பெயரில் கைபேசியை நோண்டுவதும், கணினியில் படம் பார்ப்பதுமாக நேரத்தை ஓட்டுகிறார்கள் இன்றைய இளைஞர்கள். பெற்றோர்களிடமும் பேசுவதில்லை, வீட்டிற்கு வரும் உறவினர்களிடமும் பேசுவதில்லை. முழுநேரமும் கைபேசியுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய தலைமுறையினர். இதற்கு முழு காரணம் பெற்றோர்கள் தான்.
               தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் காலம் சென்று இப்போது கைபேசியில் வெடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலருக்கு தீபாவளி என்றால் என்னவென்றே தெரியவில்லை. பல் தேய்க்காமல் பத்து மணி வரை படுக்கை தான். ஒரு முறை என் அப்பாவுடன் பட்டாசு வாங்க கடைக்கு சென்றிருந்தேன். என்ன அண்ணே பட்டாசு விற்பனை ஆகலையா என்றேன். இந்த கைபேசி வந்ததிலிருந்து எங்களோட தொழில் உட்கார்ந்து போச்சுமா. யாருமா இப்போ பட்டாசுலாம்  வாங்கறாங்க? சில பேர் தான்மா வாங்கராங்க.  எப்படி பார்த்தாலும் நஷ்டம் தான் என்ற அந்த வியாபாரியின் புலம்பல்கள் இன்னும்  கேட்டுக்கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பட்டாசு வெடிக்க நேரம்  சொல்லிவிட்டார்கள். காலை  6 மணி முதல் மாலை 6 மணி வரை. அந்த நேரத்திலும்  கைபேசியுடன் உரையாடிக்கொண்டிருப்பவர்கள் தான் அதிகம்.
                    "காலை எழுந்தவுடன் படிப்பு  
                      பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
                      மாலை முழுவதும் விளையாட்டு"
என்ற  பாரதியாரின் பாடலை இக்காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றியமைத்தால்
                      "காலை எழுந்தவுடன் கைபேசி 
                        மாலை முழுவதும் கைபேசி"
என்று தான் சொல்ல வேண்டும். நல்ல பழக்கவழக்கங்கள், உறவு முறைகள், ஓடி ஆடும்  விளையாட்டுகள், பாரம்பரிய வழக்கங்கள் அனைத்தையும் முடக்கி வைத்திருக்கிறது கைபேசி. பள்ளி  பருவத்தை முடிக்கும் வரையிலாவது கைபேசியை கொடுக்காமல் வேண்டும். நான் ஒரு புத்தகத்தில் படித்த உண்மை சம்பவத்தை மீண்டும் உங்களுக்காக இங்கு சமர்ப்பிக்கிறேன்.
                ஒரு தம்பதியினருக்கு ஐந்து வருடமாக குழந்தை இல்லாமல் தவமிருந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்கள். ஒரேயொரு பிள்ளையோடு நிறுத்திக்கொண்டார்கள். ஆண்டுகள் பல கடந்து  பிறந்ததால் அடிக்காமல், திட்டாமல் செல்லம் காட்டியே வளர்த்து  வந்தார்கள். பையனுக்கு பத்து வயது  வந்தது. தனியறை கொடுத்துவிடுவோம் என முடிவு செய்து தனியறை கொடுத்தார்கள். அச்சிறுவனுக்கு கூடவே மடிக்கணினியும் வாங்கி கொடுத்தார்கள். முடிந்தது அவன் உறவு. அந்த அறையே கதி என  கிடந்தான். அவன் படிக்கிறான் என்று பெற்றோர்களும் கண்டுகொள்ளவில்லை. பின்பு தான் தெரியவந்தது அவன் ஆபாச படங்களை பார்க்கிறான் என்று. அவனிடமிருந்து மடிக்கணினியை பிடிங்கி வைத்தார்கள். அப்போதும் அவன் அடங்கவில்லை. "ADDICTION" என்ற வியாதிக்கு ஆளாகினான். பின்  மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கிறான். பெற்றோர்கள் செய்யும் தவறு பிள்ளைகளை தான் பாதிக்கும். இதுபோல் பல பேர் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.   
              சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மனநல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்நோயைப் பற்றி சில தகவல்கள் தெரிவித்திருந்தார்கள். அவர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களில் 60% மக்கள் ADDICT என்றே நோய்க்கு ஆளாகி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான்.  அதிலும் இளைஞர்களே அதிகம்  என்றார்கள். அவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்கு அவர்கள் மருத்துவமனையில் தங்கி தான் சிகிச்சை பெறமுடியும். அதுவரை அவர்கள் எங்கும் போகமுடியாது என்றும் தெரிவித்திருந்தார்கள். பெண் பிள்ளைகளுக்கும் இதே நிலை தான்.
                தனியறை கொடுப்பதாலோ, கைபேசி, கணினி கொடுப்பதாலோ தவறு வருவதில்லை. பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் மேல் கண்காணிப்பும், கண்டிப்பும் குறையும் போது தான் தவறு ஏற்படுகிறது.
பிள்ளைகளை வீட்டிலும் கண்டிக்க கூடாது, பள்ளி, கல்லூரிகளிலும் கண்டிக்க கூடாது என்றால் அவர்கள் எங்கு தான் ஒழுக்கத்தை கற்றுக்கொள்வார்கள்? ஆண் பிள்ளையாக  இருந்தாலும், பெண் பிள்ளையாக இருந்தாலும் கண்காணிப்பும், கண்டிப்பும் மிகவும் அவசிமானது. 
                             
                             *********************************************** 

           "தனிமையின் பிள்ளைகளாக மாற்றாமல் நல்ல ஒழுக்கத்தை                 கற்றுக்கொடுத்து உறவுகளோடும் வாழ கற்றுக்கொடுங்கள்"

                            *********************************************** 



                  
Share:

முயற்சி திருவினையாக்கும், One Step - Motivational Video

Share:

இன்றைய காதல் (Indraya Kadhal)

காதல் என்பது ஓர் அறியப்படாத விந்தை, புரியாத புதிர். காதல் என்பது பல வருடம் நம் கண்ணுக்கு தெரிந்தவற்றை புறக்கணித்து, ஒரு புதிய உறவை அடைவதே  ஆகும். காதல் என்பது வயது வரம்பற்றது. காலம் காலமாய் இந்த காதல் என்ற ஓர் அழகிய உணர்வு அனைவரிடத்திலும் காணப்படுகின்றது. குழந்தையின் மேல் தாய் காட்டுவது ஒரு வகையான காதல். பசு, தன் கன்றின் மேல் காட்டுவது ஒரு வகையான காதல். இப்படி காதலை வெளிப்படுத்த பல வழிகள் இருந்தாலும் இன்றைய தலைமுறையினர் உடலுறவு கொள்வதே காதல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். "காதல்" என்ற அழகான உறவை, உணர்வை கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
             காதல் எப்படி  தோன்றுகிறது? நம் எதிர்பார்ப்புகள் ஒருவனால் (அ ) ஒருத்தியால் நிறைவேறும் போது தான் காதல் முளைக்கிறது. இதில் கண்டவுடன் காதல் என்பது வேறு பகுதி. பள்ளி பருவத்தில் ஏற்படுவது எல்லாம் இனக்கவர்சியால் ஏற்படுவது  மட்டுமே.
             எனக்கு தெரிந்த சிறுவன் ஒருவன் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொன்னான். அப்போது அவனுக்கு வயது 16. அப்பெண்ணிற்கும் அதே வயது தான். இருவருமே ஒருவரையொருவர் காதலிப்பதாக சொன்னான். சரி என்று அவன் சொல்வதை எல்லாம் வெறும் கதையாக கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சில ஆண்டுகளில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்தனர். என்னிடம் வந்து புலம்பினான். வழக்கம் போல் அறிவுரை கூறினேன். ஆனால் அவனது வயதோ என் வார்த்தைகளை ஏற்க மறுத்துவிட்டது. ஓரிரு மாதங்களில் கல்லூரியில் சேர்ந்தான். கல்லூரிக்கு சென்ற சில நாட்களில் வேறொரு பெண்ணை காதலிப்பதாக சொன்னான். மீண்டும் அறிவுரை தான் சொன்னேன். ஏற்கவில்லை அவனது மனம்.     
             நான் அவனிடம் ஒரு கேள்வி கேட்டேன். எற்காக காதலிக்கிறாய் என்றேன்.அவன் சொன்ன பதிலில் முட்டாள்தனமே தெரிந்தது. அக்கா என் ஜாதகத்தில் காதல் திருமணம் என்று சொல்லியிருக்கிறார்கள்.  அதனால் நான் காதலிக்கிறேன் என்றான்.

 இந்த பெண்ணிடம் தோல்வி என்றால் வேறொரு பெண். இப்படியே காதல் ஜெயிக்கும் வரை இது இல்லையென்றால் இன்னொன்று என்று சென்றுக்கொண்டே இருக்கவேண்டும் அக்கா என்றான். இதை கேட்ட எனக்கு கோபம் தான் வந்தது. ஆனாலும் கோபத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தேன். இதுபோல் இருக்கும் சிலர் அடிப்பட்டால் தான் திருந்துவார்கள் என்றபடி விட்டுவிட்டேன்.   
               மற்றொரு பக்கம் நேரத்தை கழிப்பதற்காகவே காதல் என்ற பெயரை உபயோகிக்கிறார்கள். ஆண், பெண் நட்பிலும் சரி காதலிலும் சரி உண்மை என்ற ஒன்று படிப்படியாக குறைந்துக்கொண்டே வருகிறது. இருபது வயது இளைஞன் ஒருவன் தன் நண்பனிடம் சொல்கிறான், டேய் அந்த பெண் அழகாக இருக்கிறாள். அவளிடம் பேசி நண்பனாகிவிட வேண்டும் எப்படியாவது. அவன் சொன்னதை போல் அப்பெண்ணிடம்  பேசினான். நட்பு காலப்போக்கில் காதலாக  மாறியது. கைகளுக்கும், கைப்பேசிக்கும் இடைவெளி இல்லாமல், உறக்கம் இல்லாமல் எப்போதும் பேச்சு தான். ஒரு நாள் அவர்களுக்குள் சின்ன சண்டை. பிரிந்துவிட்டார்கள். அந்த இளைஞன் மீண்டும்     தன் நண்பனிடம் சொல்கிறான், அப்பாடா.....சனியன் விட்டுச்சு டா.
ஏதோ அழகா இருக்கிறாள் என்று சும்மா அவள் பின்னாடி சுற்றினேன்.அவளை விட்டுவிட்டேன். இப்போது தான் எனக்கு நிம்மதியாக உள்ளது. தொலைந்தது சனியன். வா நம்ம வேறொரு பெண்ணை பார்ப்போம் என்று சந்தோஷமாக சொல்லிக்கொண்டிருந்தான். இதில் அப்பெண் மட்டுமே மனதளவில் பாதிக்கப்படுகிறாள். பெண்ணை ஒரு போதை பொருளாகவே பார்க்கிறார்கள் பலரும்.
      

           காலமும், நேரமும் வேகமாக சென்றுக்கொண்டிருக்கிற இக்காலக்கட்டத்தில், காதலும், கல்யாணமும் அதை விட வேகமாக சென்றுக்கொண்டிருக்கிறது. ஆண், பெண் பருவ காதலில் ஆண் கேட்பது, நீ என்னை உண்மையாக காதலித்தால் எனக்கு ஒரு முத்தம் கொடு என்பான். பெண் பிள்ளைகள் எப்போதும் கேட்பதை விட அதிகமாக கொடுப்பார்கள். அன்பானாலும், அடியானாலும். அவன் ஒன்று கேட்டால் இவள் பத்து கொடுப்பாள். இப்படி முத்தத்தில் தொடங்கி கல்யாணம், குழந்தை, பேரக்குழந்தை என்று 70 வயது வரை வாழ்ந்துவிட்டு விவாகரத்தும் வாங்கிவிடுகிறார்கள்,  கைபேசியில். குடும்ப வாழ்க்கை அனைத்தும் ஒரு கைபேசியில் அடங்கிவிடுகிறது. இப்படியாக செல்கிறது இன்றைய காதல். ஒரு படத்தில் வரும் வசனம் போல் தான் இன்றைய இளைஞர்களின் காதலும் மாறிவிட்டன.
ஒரு ஆணும், பெண்ணும் பேசினால் காதல் 
பழகினால் காதல் 
இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்தால் காதல் 
உதவி செய்தால் காதல் 
ஜன்னல் வழியே பார்த்தால் காதல் 
நன்றி சொன்னால் காதல் 
மன்னிப்பு கேட்டால் காதல் 
திரும்பிப் பார்த்தால் காதல் 
திரும்பிப் பார்க்கவில்லை என்றாலும் காதல் 
சிரித்தால்  காதல் 
முறைத்தால் காதல் 
என்ற வசனமே இன்றைய காதல்.
குறிப்பாக பெண்களுக்கு....காதல் என்ற பெயரில் உடலுறவுக்கு அழைத்தால் யோசிக்காமல் கண்டிப்பாக  முடியாது என்று மறுத்துவிடுங்கள்.
மனக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். எதையும் முடிவு செய்வதற்கு முன் பத்து முறை யோசித்து செயல்படுங்கள்.

                                             "ஆணுக்கும் பெண்ணுக்கும் 
                                               அன்பையே போதிக்கும் 
                                               காதல் தினம் தேவை"






Share:

Popular

Search This Blog

Powered by Blogger.

வளரும் நாடு (Valarum Naadu)

             அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார். இந்தியா வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று பட்டயம் தருகிறார். இன்னும் பல நாடுகளில் இருந்த...

ads

ads

music to my visitors

Recent Posts

Pages